Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Sunday, July 12, 2009

யாருக்கு யாரோ - உலகப்பட விமர்சனம்

(இதுவே எனது முதல் திரைப்பட விமர்சனம். ஒரு சில spoilers உள்ளது. எனவே கவனம். எனது எதிர்கால விமர்சனப் பார்வை பாதிக்கப்படும் அளவிற்கு திட்டி வரும் பின்னூட்டங்கள் மட்டறுத்தபடலாம்)

படத்தின் நாயகன் பல தமிழ் படங்களின் நாயகர்களை போல் ஒரு இளைஞன். எதையாவது சாதித்தே தீரவேண்டும் என்று ஒரு வெறி கொண்டவன். மத்திய தர குடும்பத்தில் பிறந்தவன் ஆயிற்றே. எங்கும் தடைக்கற்கள். கற்களால் தடம் மாறி உலகத்தால் விழுங்கப்பட்டானா இல்லை மேலழுந்தானா என்பதை இயக்குனர் சிறிதும் செயற்கைத்தனம் கலக்காமல் சொல்லி இருப்பது தான் இந்த படத்தின் வெற்றி.

ஒரு ஆட்டோமொபைல் பொறியாளன். பலவித கார்களை டிசைன் செய்யும் திறமை உள்ளவன். செயல் வடிவம் கொடுக்க துடிப்பவன். பணத்திற்காக அலைபவன்.

அவனாலும், அவனை நோக்கியும் வீசப்படும் வஞ்சனைகளின் தொகுப்பே இத்திரைப்படம். வஞ்சனைகளின் காவியம் என்று சொல்லும் அளவிற்கு காட்சிகளை வடியமைத்த இயக்குனர் தமிழ் சினிமா உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்.

நாயகன் ஏறி இறங்கும் ஒவ்வொரு படியையும் நமது பார்வைக்குள் புகுத்தும் நுண்மையான கேமரா.

படிகளின் விளிம்புகளில் அடிபடும் விளிம்பு நிலை நாயகனின் தடுமாற்றங்களை மெல்லிய நகைச்சுவையுடன் கூறும் திரைக்கதை. Laughter of torture என்பதை விளக்க இனி உலகப்படங்கள் வேறெதுவும் தேவை இல்லை. போரிஸ் விஷ்மன் மற்றும் ரோபெர்டா பிண்ட்லையின் படைப்புக்களையும் தாண்டி.

இந்த படத்தில் வரும் இரு கதாநாயகிகளை பற்றி சொல்லியே ஆகவேண்டும். தமிழ் சினிமா உலகில் நாயகிகள் என்றால் நடனம் ஆடவேண்டும் என்ற பார்முலாவை தகர்த்தெறிந்த கேரக்டர்கள்.

டேவிட்டின் லட்சியத்திற்கு ஊன்றுகோளாகி அவனை தனது பணத்தால் அடைய நினைக்கும் தீபா. பரந்த உலகத்தில் ஒரு கதவு மூடப்பட்டால் ஆயிரம் கதவுகள் நமக்காக காத்திருக்கும் என்பதை புரியவைக்க மஞ்சுளா. பெண்ணின் வாசனை நுகராத நாயகன். அவனைச் சுற்றி பெண்களால் கட்டப்படும் பல சிக்கலான முடிச்சுக்கள்.

கட்டுக்களை அவிழ்த்ததில் காட்டப்படும் surrealism நாம் தமிழ் சினிமா தான் பார்க்கிறோமோ என்ற அச்சத்தை வரவழைக்கின்றன.

ஆன்மீகத்தை, மதத்தின் சம்பிரதாயங்களை அதனுள் நம்பிக்கை கொண்ட நாயகனை வைத்தே எள்ளி நகையாடியுள்ள காட்சிகள் இயக்குனரின் சால்புகளை குறித்த பார்வையை பிரதியின் பிரதியாக வெளிக்கொணர்கின்றன. உதாரணத்திற்கு காரின் மேல் பற்றுள்ள நாயகன் டேவிட் காரை அக்னியாக பாவித்து தனது பற்றை தாரை வார்க்கும் திருமணக் காட்சி.

படத்தின் இசையை பற்றி சொல்லியே ஆகவேண்டும். விளிம்பு நிலை மனிதர்களின் உணர்வை பிரதிபலிக்கும் இசை. சூத்திரங்களின் மூலம் இசை அறிவு பெற்ற ஒருவனால் செய்தே இருக்கமுடியாது. எந்தவித இசையும் பயிலாத, இசையுணர்ச்சியும் அல்லாத ஒருவனால் மட்டுமே இவ்வுயரங்களை அடைந்து இருக்கமுடியும். தமிழ் இசையை, இந்திய இசையை உலகளவில் நிலைநிறுத்தும் முயற்சி. கட்டாயமாக பாராட்டப்பட வேண்டியது.

இந்த படத்தை முக்கியமான உலகத் திரைப்படங்களுக்கு நிகராக கொண்டு செல்லாமல் தடுப்பது படத்தில் வரும் ஒருசில போதனைகள், தேவையற்ற துருத்தலாக. புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் "திருடாதே" பட பாணியில். இவற்றை விட்டு மட்டும் இயக்குனர் மீண்டால் உலகத்திற்கு மற்றொரு ப்யுகோ கோவன்ச்க்கி ஜேம்ஸ் ஸ்டான்லி ரூபத்தில்.

(நடிப்பு பட்டறை நடத்துவதாக இப்படத்தின் நாயகன் சாம் ஆண்டர்சன் அறிவித்திருப்பது வளர இருக்கும் தமிழ் நடிகர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.)

(ஒவ்வொரு மாதமும் உலகப்படம் காட்டி வரும் பைத்தியக்காரனிடம் ஓர் விண்ணப்பம். எந்தவொரு கலைப்படைப்பையும் நாம் அனுபவித்த பிறகே பிறருக்கு எடுத்துச்செல்லவும்/ நிராகரிக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால் தமிழ் படங்களை முன்னிறுத்துவதில் நாம் நமது கடமையை தான் செய்து வருகிறோமா ? வரும் ஆகஸ்ட் மாத உலகத்திரைப்படமாக இத்திரைபடத்தை திரையிடுவதில் நமக்கு ஏன் தயக்கம் ? கிழக்கு மொட்டைமாடியில் பயங்கரவாத முதலாளித்துவத்தை தகர்த்தெறிந்தது போல் இத்தயக்கத்தையும் தகர்த்தெறிவோம்.)