குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையாம். தொலைபேசியில்
மனைவி அழுதாள். தூசு ஒத்துக்கொள்ளவில்லையாம்.
புரை ஏறுகிறதாம்.சாப்பிட மறுக்கிறானாம்.
சலைன் மற்றும் இன்னபிற.
அழுதேன். புலம்பினேன்.
பலரிடம் தொலைபேசினேன்.
மணிக்கொருமுறை மனைவிக்கு ஆறுதல் கூற முயன்றேன்.
இடையில் புதிய வேலைக்கான சம்பளப் பேரம் நடத்தினேன்.
யூரோவில், ரூபாயில்.
ட்விட்டரில் உள்ள மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டேன்.
விமான அட்டவனையை நோட்டம் விட்டேன்.
செய்துவரும் அலுவலை முறையாகப் பரிமாறினேன்.
ஊசிப் போட்ட மருத்துவரைக் குத்திவிடலாம் என்று
ச்பீக்கரில் குழந்தையிடம் பிதற்றினேன்.
என் கழிசடையான நகைச்சுவைக்குக் குழந்தை சிரிக்கிறதா என்று கேட்டேன்.
முதன்முதலில் இங்கு வந்த தினத்தை நாளேட்டில் தேடினேன்
கூரிய முனைக்கொண்ட பேனாவால்.
மீண்டும் ரீங்காரம்.
மருத்துவர் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டாராம்.
என்னைப் பார்த்து சிரிக்கிறான்.
ஈரமாகிப் போன டிஷ்யூவால் அவனது மூக்கருகில் இருந்த தூசியை துடைத்தேன்.
அடத் தூ.
Tuesday, January 12, 2010
Wednesday, December 30, 2009
Tuesday, December 22, 2009
கிச்சடி - 22/12/09
பேட்ரிக் பட்டேர்சன் பந்துல தொடர்ச்சியா மூணு பவுண்டரி அடிச்சுட்டு , நாலாவது பந்தையும் அடிச்சி அவுட் ஆனபோது ஸ்ரீகாந்தை எப்படியெல்லாம் திட்டினேன்னு இன்னும் ஞாபகம் இருக்கு. இப்ப என்னவோ நாலு / ஆறுன்னாலே ஒரே அலர்ஜியா இருக்குங்க. எதை ஞாபகம் வச்சிக்கறது எதை மறக்கறது ?
முதல்முறையா தீபாவளி எங்க வீட்டுல கொண்டாடாம உறவினர் வீட்டுக்கு போனது எந்த வருஷம்ன்னு ஞாபகம் இல்லை. ஆனா வெடி வெடிச்சுட்டு மேட்ச் பார்த்தது நல்லாவே நினைவுல இருக்கு. ஸ்ரீகாந்த் ரப்பர் சோல் உள்ள ஷூ போட்டுக்கிட்டு ஸ்லிப் ஆகி விழுந்து ரன் அவுட் ஆனார்ன்னு ஞாபகம் இருக்கு. அவருக்கு பிறகு வந்தவங்க எப்படி ஒன் டே மேட்ச் விளையாடக்கூடாதுன்னு பாடம் எடுத்தது ஞாபகம் இருக்கு. இம்ரான் கபிலை வெளுத்து வாங்கினது மறக்கலை. அமர்நாத் அவரோட ஸ்பெல்ல கடைசி ஓவர் போட வரும்போது இன்னிக்கு இவனுக்கு லக் இல்லை. ரெண்டு தான். அதுக்கு மேல சான்ஸ் கிடையாதுன்னு சொன்னது ஞாபகம் இருக்கு. பக்கத்துல இருந்தவன் திரும்பி பார்த்து முறைச்சது ஞாபகம் இருக்கு. முதல் ஒன்பது ஓவர்ல ஒரு விக்கெட் எடுத்திருந்தாரா இல்லாட்டி விக்கெட் எதுவும் எடுக்கலையான்னு ஞாபகம் இல்லை.
முதல்முறையா BSRB எக்ஸாம் எழுத காவேரி காலேஜ் போன சமயத்துல மனோஜ் பிரபாகரும், மோங்கியாவும் (WI எதிரா) சிறப்பா விளையாடி இந்தியாவை காலி பண்ணினாங்கன்னு ஞாபகம் இருக்கு.
என்னோட கல்யாணத்தன்னிக்கு எந்த கிரிக்கெட் மேட்சும் நடக்கலைன்னு ஞாபகம் இருக்கு :)-
வாசிம் அக்ரமோட முதல் ஸ்பெல்லை சச்சின் டெண்டுல்கர் அடிச்சி ஆடின்னா கடுப்பு கடுப்பா வரும். ரெண்டு /மூணு ஓவர்ல ஸ்பெல் முடிச்சிக்கிட்டு மறுபடியும் (சச்சின் அவுட் ஆனபிறகு) வந்து கழுத்தறுப்பார்ன்னு பயம் தான் காரணம். இப்ப கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு அது மாதிரி எந்த பவுலர் கிட்ட பயம் ? தெரிஞ்சிக்க ஆசையா இருக்கு.
ஹைஸ்கோருக்கு காரணம் பேட்ஸ்மன் திங்கிங்ல ஏற்பட்ட paradigm shift தான் காரணம்ன்னு புரிஞ்சாலும் ஏத்துக்க மனசு வரமாட்டேங்குது.
2003 ல ஜெர்மனி வந்து ஒரே மாசம் தான் முடிஞ்சி இருந்தது. இந்தியா ஆஸ்திரேலியா டூர் நடந்துக்கிட்டு இருந்தது. ஏதோ ஒரு சேனல் கார்டு வாங்கி போட்டு அடிலைட் டெஸ்ட் மேட்ச் பார்த்தேன். கலக்கல் மேட்ச். அடுத்த மெல்போர்ன் மேட்ச் நண்பர்களோட பார்க்கனும்ன்னு டக்குன்னு ஒரு டிக்கெட் வாங்கி கிறிஸ்துமஸ் போது திருச்சி வந்தேன். இப்ப பையனை பார்க்கனும்ன்னு ஆசை ஆசையா இருந்தாலும் வேலை / விசா காரணங்களால வரமுடியலை. கலியுகத்துல பண்ணின பாவத்துக்கு அந்த ஜென்மத்துலயே பலனை அனுபவிக்கனும் போல !
Serie A லீக் ரொம்ப பார்த்தது கிடையாது. ஆனா ஸ்வீடன் மேட்ச்ல Zlatan Ibramovich விளையாடினதை பலமுறை பார்த்து இருக்கேன். வெறும் ஹைப் தான்ன்னு நண்பர்கள் கிட்ட சொல்லி இருக்கேன். பட், இப்ப Barca மேட்ச் பார்க்கும்போது தான் தெரியுது, ஏன் எல்லாரும் தலைமேல வச்சி கொண்டாடினாங்கன்னு ! Pure Class.
டால்மியா மாதிரி ஒரு ஆளு நம்ப வூரு கால்பந்து நிர்வாகத்துக்கு வந்தா நல்லா இருக்கும். (கமர்ஷியளைஸ் பண்ணிட்டாருன்னு பின்னாடி திட்டிக்கலாம் !) இந்தியாவுல கால்பந்துக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் பயங்கர அதிகம். oliver kahn பார்வெல் மேட்ச் பார்க்க கல்கத்தாவுல ஒரு லட்சத்துக்கு அதிகமானவங்க stadium வந்திருந்தாங்க !
ட்விட்டர் கொஞ்சம் ஈசியா இருக்கறதுனால ஒரு மூணு வாரமா ப்ளாக் ரொம்ப படிக்கலை. எந்த வலைப்பக்கத்தை திறந்தாலும் ஒண்ணு சாரு இல்லாட்டி வேட்டைக்காரன். ரெண்டுலயும் சுவாரசியம் போயிடிச்சு. சோ, மறுபடியும் ப்ளாக் எழுதனும்ன்னு வலுக்கட்டாயமா ஆரம்பிச்சா ஸ்போர்ட்ஸ் மேட்டர் தான் மனசுல தோணுது. சோ, ரொம்ப கஷ்டப்பட்டு கீழ்வருபவன.
ஒரு மொழில ஒரே அர்த்தம் கொடுக்கற பல சொற்கள் இருக்கும் காரணம் என்ன ? குருதி, இரத்தம் (ரத்தம்) ஏன் ?
empathy ங்கர ஆங்கில சொல்லை தமிழ்ல நேரடியா மொழிபெயர்க்க முடியுமா ? பல ஆன்லைன் டிக்ஷ்ணரில பச்சாதாபம்ன்னு எழுதி இருக்கு. பட், எனக்கு திருப்தி இல்லை.
ஒரு நம்பிக்கை முட்டாள்த்தனமா இருந்தா மூடநம்பிக்கை ஆகுதா இல்லாட்டி மூடர்களோட நம்பிக்கை எல்லாம் மூடநம்பிக்கை ஆகுதா ?
எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை கிடையாது, கைரேகை, கிளி ஜோசியம் ஆகியவையில் நம்பிக்கை கிடையாது. நாடி ஜோதிடம் / எனர்ஜி transformation போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. இறை நம்பிக்கை குறித்து தெரியவில்லை. ஆனால் பிள்ளையார், முருகன் மற்றும் சிங்கபெருமாளிடம் நம்பிக்கை உண்டு. பேய்களில் உள்ள அனைத்து classification மீதும் நம்பிக்கை கிடையாது.
தமிழ்நாட்டில் வசிக்கும் வரை மார்கழி மாதம் என்றால் குளிரும் என்றும் நம்பினேன்.
எனது நம்பிக்கைகளின் அடிப்படையில் என்னை எப்படி வகையறுக்கவேண்டும் ?
Monday, December 21, 2009
மார்கழி
அழகழகான வடிவங்கள். நேர்கோடாக, சுழிசுழியாக, வளைவாக
மெலிதான குளிர். குறுக்கும் நெடுக்குமாக, குனிந்தும் எம்பியும் வடிவத்தை சமன் செய்யும் பெண்கள்.
விதவிதமான வண்ணங்கள், கலர்பொடிகளின் எல்லைக்கு உட்பட்டு.
எண்ணங்களின் பிரதிபலிப்பாக, அழகியலின் அளவுகோளாக, கற்பனையின் எல்லையாக.
நைட்டியின் மேல் துண்டோடு, வெளிர்நீல சுடிதாரோடு
சாணத்திற்கு நடுவில் செம்பருத்தியும், சூரியகாந்தியும்.
தலையை துவட்டியபடியே, புத்தம் புதிதாக, வாசனையாக அருகில் வந்தமரும் எனது மனைவி.
என்னடா செல்லம் யோசிச்சிக்கிட்டு இருக்க ? விழித்தெழுப்பிய அவளது குரல்.
இல்லடி. மழை சோன்னு கொட்டினா எப்படி இருக்கும் !
Tuesday, December 1, 2009
ப்ளாக்கர் அக்கௌன்ட் முடக்கப்பட்டால் / முடக்கப்படுவதற்கு முன் என்ன செய்யலாம் ?
உண்மையில் முடக்கப்பட்ட அக்கௌன்ட்டை எப்படி திரும்பப் பெறுவது என்பது எனக்கும் தெரியாது.ஆனால் கூகுளிடம் மெயில் செய்து கேட்டால்
திரும்பக்கிடைக்கும் என்றே நினைக்கிறேன். பலருக்கும் இவ்வாறு திரும்ப கிடைத்திருக்கிறது.
வரும்முன் காப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் கீழ்வருபவன !
உங்கள் தளம் மால்வேர் மூலம் தாக்கப்பட்டால் மால்வேர் எங்கிருந்து வருகிறது / எப்படி நீக்குவது என்பதெல்லாம் கணிப்பொறி / மென்பொருள் அறிமுகம் உள்ளவர்களால் தான் எளிதாக செய்ய முடிகிறது.
இந்த சூழ்நிலையில் உங்கள் வலைப்பதிவில் உள்ள contents யை எளிதாக தக்கவைத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
1) உங்கள் பிளாக்கர் அக்கௌன்ட் login செய்து கொள்ளுங்கள். பிறகு settings --> Basic சென்று Export Blog (Blog Tools அருகில் இருக்கும்) கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் Download Blog என்று ஒரு பட்டன் இருக்கும்.
அதை கிளிக் செய்து உங்கள் கணிப்பொறியில் .xml file ஆக சேமிக்கவும்.
பிறகு தேவைப்படும்போது import செய்து கொள்ளலாம்.
2) இதைவிட எளிதான வழி www.wordpress.com சென்று உங்களுக்கென ஒரு புது அக்கௌன்ட் தொடங்கவும். தொடங்கிய பிறகு, அங்குள்ள Tools --> Import கிளிக் செய்தால் உங்களுக்கு பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும். அதில் ஒன்றான blogger கிளிக் செய்யவும். (உங்களுடைய பிளாக்கர் அக்கௌன்ட் லாகின் செய்துக்கொண்டு கிளிக் செய்தால் எளிது) நீங்கள் வைத்திருக்கும் அனைத்து பதிவுகளும் லிஸ்ட் செய்யப்படும். அந்த லிஸ்ட்டில் தேவையானவற்றை மட்டும் இம்போர்ட் பட்டன் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
எனது இரண்டு வலைத்தளங்களையும் http://thodar.wordpress.com என்ற wordpress தளத்தில் சேமித்து உள்ளேன். இம்போர்ட் செய்யும்போது உங்களது widget மற்றும் திரட்டிகளுக்காக நீங்கள் இணைத்த add on scripts எதுவும் இம்போர்ட் செய்யப்படாது. ஆதலால், இந்த தளமும் malware மூலம் தாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.
இவ்வாறு வாரம் ஒருமுறை இம்போர்ட் செய்து கொள்ளலாம். ஒவ்வொருமுறை இம்போர்ட் செய்யும்போதும் புதிதாக எழுதப்பட்டுள்ள இடுகைகளும் / பின்னூட்டங்களும் மட்டுமே ஏற்றப்படும். ஆதலால் நேரம் அதிகம் ஆகாது.
Friday, November 27, 2009
பிடிக்காதவர்கள் / மிகவும் பிடிக்காதவர்கள்
நண்பர் பீர் அவர்களின் அழைப்பை ஏற்று பலமுறை எழுதி ஏனோ பதிவிடாமல் இருந்து வந்திருக்கிறேன். இந்தப்பதிவை தொடங்கிய மாதவராஜ் "பிடிக்காதவர்களைச் சொல்வதற்கு இங்கு ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது. முக்கியமாக அதற்குத்தான் இந்தத் தொடர்" என்று எழுதி இருந்தார். எனக்கு பிடிக்காதவரை எழுதவதில் ஒரு பிரச்னையும்/மனத்தடையும் இல்லை. பல categoryகளில் பிடித்தவர் உடனடியாக மனதிற்கு தோன்றினாலும் பிடிக்காதவர் பிடிபட மறுக்கிறது. Anyways, முயற்சி செய்துள்ளேன். படித்துப் பாருங்கள்.
பதிவர்
பிடித்தவர் - தண்டோரா. பிரமாதமான எழுத்துநடை. நகைச்சுவையும் சூப்பர். (உன்னைப்போல் ஒருவன் பட விவாதத்தில் தேவையில்லாமல் வெட்டியாக கலந்துக்கொண்டபோது நான் கண்டெடுத்த பதிவர் !)
பிடிக்காதவர் - எழுத ஆரம்பித்து ஒரு சில வருடங்களானாலும் கிறுக்குத்தனமாக எழுதும்(தமிழ்) பதிவர்கள் அனைவரும் :)-
கவிஞர்
பிடித்தவர் - நான் கவிதைகளை பதிவுகளில் மட்டுமே படித்துள்ளேன். அவற்றுள் ஜ்யோவ்ராம் சுந்தரின் கவிதைகள் பிடிக்கும். (most of them)
பிடிக்காதவர் - முதல் ஒன்றிரண்டு வரிகளில் கவிதை புரிய கடினமாக இருந்தால் படிப்பதில்லை. ஆதலால் பிடிக்காத கவிதைகள்/கவிஞர்கள் என்று எதுவும்/யாரும் இல்லை.
எழுத்தாளர்
பிடித்தவர் - தி ஜானகிராமன், ஜெயமோகன், சாருநிவேதிதா, ஆதவன் தீட்சண்யா, சுஜாதா, பட்டுகோட்டை பிரபாகர்
பிடிக்காதவர் - விமலா ரமணி, பாலகுமாரன், ராஜேந்திரகுமார்
விளையாட்டு வீரர்/வீராங்கனை
பிடித்தவர் - ஜன்ஷேர் கான் , கேரி கஸ்பரோவ், ஸ்டீபான் எட்பர்க், வீனஸ் வில்லியம்ஸ், மரடோனா, அஷ்ராவின், அசாருதீன், லாரா, வாசிம் அக்ரம், டைகர் வுட்ஸ் (விளையாட்டுக்கு மட்டும் நாடு / மாநிலம் ரூல்ஸ் ஒதுக்கப்படுகிறது)
பிடிக்காதவர் - நண்பர் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த் பெயரை எழுதி இருந்தார். அதுக்கு காரணமாக அவர் ஸ்பெயினில் வசிப்பதை சொல்லி இருந்தார். அவரை பின்னூட்டத்தில் பிடிக்காததற்கு "இது எல்லாம் ஒரு காரணமா" என்று கேட்டு இருந்தேன். அதற்கு அவர் பிடிக்காத விளையாட்டு வீரர் எழுதுவது சுலபமில்லை. யோசித்துப் பாருங்கள் என்று கூறி இருந்தார். அவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. சச்சின் பேட்டிங் செய்யும்போது வாசிம் அக்ரம் பந்துபோட வந்தால் "டேய், அவன் காலை உடைங்கடா" என்று கத்தினாலும் மனதின் ஒரு மூலையிலாவது அவரது பந்துவீச்சை ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை.
நடிகர் / நடிகை
பிடித்தவர் - கமல், சிம்ரன், சிவாஜி
பிடிக்காதவர் - நமீதா !
இசை அமைப்பாளர்
பிடித்தவர் - முன்பு இளையராஜாவின் பாடல்கள் என்றால் உயிர். இப்போழுதென்னவோ சற்றுப் பழையப் பாடல்கள் பிடிக்கின்றன.
இதைத்தொடர புதிதாக தமிழ்ப்பதிவு எழுத நினைக்கும் மூன்று வாசகர்களை அழைக்கிறேன் :)-
Monday, November 23, 2009
திருடுதல்
சிறிது காலமாக உடல் பருமனாகிவிட்டதால் தினமும் இரண்டு கிலோமீட்டர் நடப்பதை ஒரு பழக்கமாக்க முயன்று வருகிறேன். சென்ற வாரத்தில் ஒருநாள் இப்படித்தான் இரவு ஏழு மணி அளவில் நடக்க ஆரம்பித்தேன். முன்னூறு மீட்டர் நடந்து இருப்பேன். தரையில் ஐந்து யூரோ கீழே கிடந்தது. சுற்றிலும் யாரும் இல்லை. பணத்தை எடுத்துப்பார்த்தேன். திருப்பிப் திருப்பி பார்த்துகொண்டே நடந்தேன்.

என்னைப்போன்றே நடைப்பழக கிருஷ்ணா பரமாத்மா தனியாக வரும்போது பணத்தை கண்டிருந்தால் என்ன செய்திருப்பார் ?
கோபிகைகளுடன் சேர்ந்து வரும்போது பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?
பணத்தை கீழே போட்டுவிட்டுச் சென்றால் அது உரியவரைப் போய் சேருமா ?
ஐந்து யூரோவை எடுத்துசெல்வதால் யாருக்கு என்ன நஷ்டம் வந்துவிட முடியும் ? இதுவே நூறு யூரோவாக இருந்தால் என்ன செய்து இருப்பேன் ? இல்லை ஆயிரம் யூரோவாக இருந்தால் ?
நிச்சயம் ஆயிரம் என்றால் போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுத்திருப்பேன்.
மாதம் இருபதாயிரம் யூரோக்கள் சம்பாதிக்கும் ஒருவரின் ஆயிரமாக இருந்தால் ?
சுத்தமாக பொறுப்பே இல்லாமல் பணத்தை தொலைத்தவனிடம் திருப்பித்தருவது
சரியா ?
எப்படிப்பட்ட பணமாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். என்னுடையது கிடையாது என்றபோது எடுத்துச்சென்றால் திருடுவது தானே ?
இவ்வளவு சிறியதொகையாக இருக்கும் பட்சத்தில் ஒரு ஹைனக்கண் பியர் வாங்கி குடித்துவிட்டு மறந்துப்போவது தான் சரியான நியாயமா ? மற்ற அனைத்தும் ஒருவித moral superiority அடைவதற்கான பாசாங்கா ?
இச்சிறு தொகைக்கே முடிவு எடுக்கமுடியாமல் இருக்கும் ஒருவன்இவ்வுலகத்தில் வாழ தகுதி உண்டா ? அப்படிப்பட்ட ஒருவனுடன் சேர்ந்து வாழ்பவர்கள் சபிக்கப்பட்டவர்களா ?
இதே பணத்தை கடைகளில் யாராவது என்னிடம் தவறுதலாக கொடுத்துவிட்டால் (எனக்கு தெரியும்பட்சத்தில்) திருப்பிக்கொடுத்துவிடுவேன். பிறகு என்ன ?
அந்த பணத்தை தரையில் இருந்து எடுத்தவுடன் என்னுடையதாகிவிட்டதா ?
நானும் பலமுறை தொலைத்தவன் தானே என்று எனக்கு நானே சமாதானம். எவ்வளவு பணம் தொலைத்துள்ளேன் என்று கணக்கு செய்து அவற்றுடன் கூட்டலோ/கழித்தலோ செய்து பார்க்கிறேன். இது சரியா ?
கம்யூனிசம் பேசும் அரசியல் தலைவர்கள் பெரிய வில்லாக்களில் வசிக்கிறார்கள். எவ்வளவோ பெரிய வங்கிகளில் கோடிகோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்த ஐந்து யூரோக்களில் என்ன ஆகிவிடும் ? இது திருடுவதாக எப்படி ஆகமுடியும் ?
எனக்கு முன்பு துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணாக(யுவதியாக) இருக்கவேண்டும் - நடந்துக்கொண்டிருக்கிறாள். அவளுடையதாக இருக்குமா ? அவளுடன் பேசுவதற்காக/பழகுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கிறேனா ? நான் எடுக்கும்போது தான் யாரும் அருகில் இல்லையே ? பிறகு ஏன் அவளுடையதாக இருக்கவேண்டும் ?
அவள் முதலில் பணத்தை பார்த்து இருந்தால் என்ன செய்து இருப்பாள் ?
அவர்களின் இறை தூதர் நபிகள் நாயகம் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பார் ?
பணத்தை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியது தான். ஞாபகம் இருந்தால் ஒருசில நாட்களில் ஏதாவதொரு charity செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகி போய்விடாது. நல்லவேளையாக வீடுவந்து சேர்ந்திருந்தேன்.
ஒரு சில நாட்களில் மறந்தும்விட்டேன்.
ஆனால் இன்று அந்த துருக்கிப்பெண்ணை பார்த்தேன். எனது பர்சில் உள்ள ஐந்து யூரோ துருத்துகிறது.
Subscribe to:
Posts (Atom)