Friday, June 10, 2011

ஐபிஎல் - ஒரு விவாதம்

ஐபிஎல் - ஒரு விவாதம் (நன்றி புதியதலைமுறை)

ஐபிஎல் 2011ன் நாயகனாக ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால்
அனைவரின் ஒருமித்த தேர்வாக கிரிஸ் கெய்ல்தான் இருப்பார். எதிராக பந்து வீச வேண்டிய பவுலர்கள் கெய்ல் புயலால் திக்குமுக்காடி காணாமல் போனார்கள். இங்கே கெய்ல் பட்டையை கிளப்பிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவருடைய மேற்கு இந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோற்றதை பார்த்திருக்கலாம். அவர்கள் தோற்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை அதுதான். ஆனாலும் க்ரிஸ் கெய்ல் மேற்கிந்திய தீவு அணிக்கு விளையாடி இருந்தால் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கும் இல்லையா?

அவர் மட்டுமல்ல அருமையான பந்துவீச்சாளரான லசித் மலிங்கா.. ஐபிஎல்லுக்காக இலங்கை அணியின் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகியுள்ளார். பிரட் லீ, ஷான் டைட் போன்றவர்களும் இதே வழியில் தங்களது ஓய்வை அறிவித்து உள்ளனர். தனிப்பட்ட அளவில் இவர்களது முடிவில் உள்ள நியாங்கள் புரிந்தாலும், கிரிக்கெட் பார்வையில் பார்க்கும்போது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷங்களான கம்பீர் மற்றும் சேவாக் இருவரும் உலககோப்பை வெற்றிக்கு பெரும் தூண்களாக இருந்து உதவியதை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. ஆனால் அடுத்த மாதம் இந்திய அணி , மேற்கு இந்திய தீவிற்கு செல்லும்போதோ அல்லது இங்கிலாந்து செல்லும்போதோ இவர்கள் அணியில் இடம்பெறுவார்களா என்பது சந்தேகமே ! தங்களது உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் ஐபிஎல்லில் விளையாடும்போது ஏற்பட்ட காயம் காரணமாக இருக்கலாம் இல்லையென்றால் உலகக்கோப்பையில் காயமடைந்த உடலுடன் ஐ பி எல் விளையாடியதும் காரணமாக இருக்கலாம்.

இந்தியாவை சேர்ந்த பல இளம் வீரர்களை ஐ பி எல் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இந்த இளம்வயதிலேயே பெரிய வாய்ப்புக்கள் கிடைக்கும்போது 20-20 க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தங்களது முழுத்திறனை வளர்த்துக்கொள்ளாமல் மழுங்கி விடுவார்கள்.

குறிப்பாக லக்ஷ்மணை போலோ, திராவிடை போலோ ஆட்டக்காரர்கள் கிடைப்பார்களா ? சுழல் பந்து வீரர்கள் பந்தை சுழற்ற முயற்சியாவது செய்வார்களா ? இவற்றை எல்லாம் சரியாக தெரிந்துக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் டி20 போட்டிகள் ஒருநாளும் பயன்படாது.

இந்த போட்டிகளின் தொலைக்காட்சி உரிமை கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் போட்டிகளின் எண்ணிக்கையை கூட்ட ஸ்பான்சர்களிடம் இருந்து அழுத்தம் இல்லாமலா இருக்கும் ? இது இன்டர்நேஷனல் போட்டிகளை நிச்சயம் பாதிக்கும். வீரர்களின் பங்கேற்பு குறித்து அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் ஒரு திடமான அணுகுமுறையை கொண்டு வர பயப்படுகிறார்கள். சின்னஞ்சிறு கிரிக்கெட் நாடுகளான நியூசிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் விளையாடும் வீரர்கள் தனது நாட்டிற்கான போட்டியை விட ஐபிஎல்க்கே முக்கியத்துவம் தருவார்கள் என்பது திண்ணம்.

நன்றி புதியதலைமுறை

நன்றி அதிஷா

Wednesday, January 19, 2011

பிரதிபலிப்பு.

மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலை
சிந்திக்கும் மனம் கொண்ட நான்
தற்கொலை குறித்து வரும்
எண்ணங்களை விரட்ட யத்தனிப்பதில்
உள்ள முரண்பாட்டை
பரிசுத்தமான கழிவறையில் உள்ள
என் முகம் பிரதிபலிக்கிறது.