Tuesday, January 12, 2010

அடத் தூ

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையாம். தொலைபேசியில்
மனைவி அழுதாள். தூசு ஒத்துக்கொள்ளவில்லையாம்.
புரை ஏறுகிறதாம்.சாப்பிட மறுக்கிறானாம்.
சலைன் மற்றும் இன்னபிற.

அழுதேன். புலம்பினேன்.
பலரிடம் தொலைபேசினேன்.
மணிக்கொருமுறை மனைவிக்கு ஆறுதல் கூற முயன்றேன்.
இடையில் புதிய வேலைக்கான சம்பளப் பேரம் நடத்தினேன்.
யூரோவில், ரூபாயில்.
ட்விட்டரில் உள்ள மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டேன்.
விமான அட்டவனையை நோட்டம் விட்டேன்.
செய்துவரும் அலுவலை முறையாகப் பரிமாறினேன்.
ஊசிப் போட்ட மருத்துவரைக் குத்திவிடலாம் என்று
ச்பீக்கரில் குழந்தையிடம் பிதற்றினேன்.
என் கழிசடையான நகைச்சுவைக்குக் குழந்தை சிரிக்கிறதா என்று கேட்டேன்.
முதன்முதலில் இங்கு வந்த தினத்தை நாளேட்டில் தேடினேன்
கூரிய முனைக்கொண்ட பேனாவால்.

மீண்டும் ரீங்காரம்.
மருத்துவர் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டாராம்.
என்னைப் பார்த்து சிரிக்கிறான்.
ஈரமாகிப் போன டிஷ்யூவால் அவனது மூக்கருகில் இருந்த தூசியை துடைத்தேன்.

அடத் தூ.