Friday, August 20, 2010

ட்ரிப்

ஜஸ்ட் இரண்டு வார இந்திய ட்ரிப்.

குட்டிப்பையனுக்கு ஒரு வயசு கம்ப்ளீட் ஆயிடுச்சு. காது குத்தறபோது பயந்தளவுக்கு அழல.

ட்ரிப் பயங்கர ஹெக்டிக். சென்னைல வெறும் ட்ரான்சிட் மட்டும் தான்.

பெங்களூர்ல மூணு நாள் இருந்தேன். ட்ராபிக் ஜாம் கம்மி ஆகி இருக்கு. நண்பரோட கார் எடுத்து ஓட்டலாம்ன்னு யோசிச்சேன். பட், ஓட்டல. ஹூடி பக்கத்துல ரெண்டு வருஷமா முடிக்காம பூட்டி போட்டு இருந்த அபார்ட்மென்ட் போய் பார்த்தேன். பூட்டிட்டு திரும்பி வந்தேன்.

கொஞ்சம் நண்பர்கள் மீட் பண்ணினேன். ஐசிஐசியை பேங்க் போனேன். எழுத்தாளர் கோணங்கியை சந்திச்சேன். நடிகை நேஹா தூபியாவை பார்த்தேன். அத தவிர ஆடி 18போது காவேரி கரைல இருந்தேன். ஒரே ஒரு நாளைக்கு தண்ணி ஃபுல்லா ஓடிச்சு.

இந்தமுறை ட்ரிப்ல சுவாரசியமா நடந்த சம்பவம் எல்லாம் ப்ளாக் எழுதறதுக்காக குறிப்பு எடுத்து வச்சிருந்தேன். தொலைஞ்சி போயிடிச்சி. அதுனால உங்க எல்லாருக்கும் அத்தியாவசியமா தெரியவேண்டிய மிக சுவாரசியமான சம்பவங்களை மட்டும் ஞாபகத்தில் இருந்து மேலே எழுதி இருக்கேன்.

(சுவாரசியம் தொடரும்)

1) பயணம் ஜெட் ஏர்வேஸ் விமானத்துல.

3) ஓட்ட நினைச்ச கார் சான்ட்ரோ.

4) பூட்டின பூட்டு கோத்ரேஜ்.

5) காவேரில தண்ணி ஃபுல்லா ஓடின தேதி ஆடி 18.

6) மீட் பண்ணின நண்பர்கள் பேரு ரகு அண்ட் சங்கர்.

7) எழுத்தாளரையும் நடிகையையும் மீட் பண்ணினது உண்மை. நன்றி inception.

(சுவாரசியம் முற்றும்)

8) ஸாரி. நான் போன ஐசிஐசியை பேங்க் பிரான்ச் திருச்சி தில்லைநகர்ல.

Thursday, May 6, 2010

விதி

உணர்ச்சிக்கு வடிகாலாக எழுது.
எழுதியதை வகைப்படுத்து
வகை இலக்கணத்தைப் பரிச்சயம் செய்துகொள்
திரும்ப எழுதியதை படி.
கிழித்தெறி அல்லது திருத்து.
தெரிந்து செய்யும் இலக்கண பிழைகளில் கவித்துவம் மிளிரும்.
எழுதியதை திரும்பப் படி
அல்லது
திரும்ப எழுதியதை படி.
செப்பனிடு செப்பனிடு.
படித்துப் பார். தூரச் சென்றிருப்பாய்.
பிரதியிலிருந்து படைப்பவன் விலகும் தருணம் இது.

Sunday, March 7, 2010

கிச்சடி - 07/03/2010

இங்கு நடந்த லோக்கல் முன்சிபல் தேர்தலில் கீர்ட் வில்டர்சின் கட்சி பங்குபெற்ற இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. ஓரிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொரு இடத்தில் இரண்டாவதாக வந்துள்ளனர். ஒரு அடிப்படைவாதக் கட்சியின் (முஸ்லிம்களுக்கு எதிரான) வெற்றி ஒருவித அமைதியின்மையை ஏற்படுத்தலாம். மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல். மறுபடியும் ஆப்கானுக்கு குறைந்த அளவில் ராணுவம் அனுப்ப ஆளும்கட்சி முடிவெடுத்ததால் கூட்டணி கட்சிகள் ஆதரவை திரும்ப பெற்றனர். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் வில்டர்ஸ் கட்சி வெற்றி பெற்றால் ? இதை தான் கேட்ச் 22 என்று சொல்கின்றனர்.

திருச்சியில் எனது நெருங்கிய நண்பனின் பெயர் தாயுமானவன். நல்ல புத்திசாலி. பொறியியல் படிப்பை முடித்த இரண்டு வருடத்தில் திடீரென்று ஜக்கி வாசுதேவ் ஆசுரமத்தில் சேர்ந்தான். உடனடியாகவே பிரம்மச்சரியம் வேறு தரப்பட்டது. சேர்ந்த புதிதில் அதை நான் எஸ்கேபிசம் என்றே நினைத்தேன். பலமுறை ஆசிரமம் சென்று அவனை திரும்ப அழைத்து வர முயன்றோம். எதற்கும் அசையவில்லை. இவை நடந்தது பதினோரு வருடங்களுக்கு முன்பு. இன்று வரை அவன் அங்கு அருமையாகவே இருந்து வருகிறான். Hopefully for his sake, I wish jakki is not proved fake during our life time.

நம்பிக்கை என்றால் என்ன ?

ஏதாவது சாமியாரை பின்பற்ற யோசனை இருந்தால், இறந்தவர்களாக பார்த்து தேர்ந்தெடுங்கள்.

சச்சின் டெண்டுல்கர் 200 அடித்ததை பார்க்க முடியவில்லை. அருமையாக ஆடி இருக்கவேண்டும். இனி பலரும் இரட்டை சதம் அடிப்பார்கள் என்றே அனுமானிக்கிறேன். வெறும் அனுமானம் மட்டும் தான். ஜோதிடம் எல்லாம் இல்லை !

எனது மகன் அடிக்கடி Nick Hits என்ற சேனலில் ஆங்கிலப் பாடல்களை விரும்பி பார்க்கிறான். நல்லவேளையாக தமிழ்நாட்டில் இல்லை. இருந்திருந்தால் Sun News சேனல் பார்க்க நேரிட்டிருக்கலாம்.

Galerianki என்ற போலிஷ் மொழி திரைப்படம் முடிந்தால் பாருங்கள். தமிழ் பதிவுகளில் விமர்சனம் முன்பே விமர்சனம் எழுதப்பட்டு இருக்கலாம். Designer wear அணிவதற்காக / வாங்குவதற்காக விபசாரத்தில் ஈடுபடும் mall girls பற்றிய படம். போலந்தில் ஒருவித கலகத்தை ஏற்படுத்திய படம்.

கடந்த பதிவில் கவிதை என்ற பெயரில் கிறுக்கியதை படித்த ஒரு பிரபல பதிவர் உங்களுக்கு பதிவு வியாதியா என்று கேட்டார். அவரிடம் கவிதை வெறும் புனைவு தான் என்று கூறி தப்பித்துக்கொண்டேன். பொய் சொல்லியிருந்தாலும் மறுபடியும் அதுபோன்ற தவறுகளை செய்வதாக இல்லை.

கடந்த ஒரு மாதத்தில் ஏன் பதிவு எழுதவில்லை என்று ஒருவர் கூட கேட்கவில்லையே ? இதற்கெல்லாம் கவலைப்பட்டால் முடியுமா ?

அதிஷாவின் திருமணத்தில் பல பதிவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. தம்பதிகளுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

Tuesday, January 12, 2010

அடத் தூ

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையாம். தொலைபேசியில்
மனைவி அழுதாள். தூசு ஒத்துக்கொள்ளவில்லையாம்.
புரை ஏறுகிறதாம்.சாப்பிட மறுக்கிறானாம்.
சலைன் மற்றும் இன்னபிற.

அழுதேன். புலம்பினேன்.
பலரிடம் தொலைபேசினேன்.
மணிக்கொருமுறை மனைவிக்கு ஆறுதல் கூற முயன்றேன்.
இடையில் புதிய வேலைக்கான சம்பளப் பேரம் நடத்தினேன்.
யூரோவில், ரூபாயில்.
ட்விட்டரில் உள்ள மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டேன்.
விமான அட்டவனையை நோட்டம் விட்டேன்.
செய்துவரும் அலுவலை முறையாகப் பரிமாறினேன்.
ஊசிப் போட்ட மருத்துவரைக் குத்திவிடலாம் என்று
ச்பீக்கரில் குழந்தையிடம் பிதற்றினேன்.
என் கழிசடையான நகைச்சுவைக்குக் குழந்தை சிரிக்கிறதா என்று கேட்டேன்.
முதன்முதலில் இங்கு வந்த தினத்தை நாளேட்டில் தேடினேன்
கூரிய முனைக்கொண்ட பேனாவால்.

மீண்டும் ரீங்காரம்.
மருத்துவர் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டாராம்.
என்னைப் பார்த்து சிரிக்கிறான்.
ஈரமாகிப் போன டிஷ்யூவால் அவனது மூக்கருகில் இருந்த தூசியை துடைத்தேன்.

அடத் தூ.